மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு அபராதம் மற்றும் புள்ளிகள் குறைப்பு

அன்டிகுவா மற்றும் பார்புடாவின் நோர்த் சவுண்ட் பகுதியில் நடைபெற்ற இலங்கை மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், நிர்ணயிக்கப்பட்ட நேரத்துக்குள் பந்துவீசத் தவறியமைக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அபராதம் விதித்துள்ளது.

இதன்படி, மேற்கிந்தியத் தீவுகள் அணியினருக்கு அவர்களின் போட்டி ஊதியத்தில் 10 சதவீத அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஐசிசி உலக டெஸ்ட் செம்பியன்ஷிப் தொடரின் இரண்டு புள்ளிகள் அந்த அணியின் மொத்தப் புள்ளிகளிலிருந்து குறைக்கப்பட்டுள்ளன.

ஐசிசி எலைட் பெனல் போட்டி மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீநாத் இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.

அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கணக்கில் கொண்ட பின்னரும், அந்த அணி இலக்கை விட இரண்டு ஓவர்கள் பின்தங்கியிருந்தமை கண்டறியப்பட்டது.

ஐசிசி நடத்தை விதிகளின்படி, ஒவ்வொரு ஓவர் பின்தங்குவதற்கும் தலா 5 சதவீத அபராதமும், ஒவ்வொரு ஓவருக்கும் தலா ஒரு புள்ளியும் குறைக்கப்படுவது வழக்கமாகும்.

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைவர் ரோஸ்டன் சேஸ் இந்த குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதால், முறையான விசாரணை இன்றி இந்தத் தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

கள நடுவர்களான போல் ரீஃபல், அஹ்சான் ராசா மற்றும் மூன்றாவது மற்றும் நான்காவது நடுவர்களால் இந்த குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.