ஈரானின் திட்டம் வேடிக்கையானது; வெள்ளை மாளிகை அதிரடி அறிவிப்பு!

ஈரானால் முன்வைக்கப்பட்ட 10 அம்சத் திட்டம் அடிப்படைத் தன்மையற்றது (Unserious) என்றும், அமெரிக்கா முன்வைத்த திட்டமே பேச்சுவார்த்தைக்கு உகந்த அடிப்படையைக் கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணை எவ்வித தடைகளும் அல்லது தாமதமும் இன்றி உடனடியாகத் திறக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்பார்ப்பதாக லீவிட் குறிப்பிட்டுள்ளார்.
இந்த, இரண்டு வார போர்நிறுத்த காலத்தில் பேச்சுவார்த்தைகள் தொடர வேண்டுமானால்,ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல் போக்குவரத்து தடையின்றி நடப்பது அவசியம் என்பதை அமெரிக்கா ஒரு முக்கிய நிபந்தனையாக விதித்துள்ளது.
மிக முக்கியமாக, தற்போதைய போர்நிறுத்த ஒப்பந்தம் லெபனானுக்குப் பொருந்தாது என்பதை லீவிட் தெளிவுபடுத்தியுள்ளார்.
“லெபனான் இந்த போர்நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல. இது தொடர்பான தகவல் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் கூறினார். இதன் மூலம் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் என்பது உறுதியாகியுள்ளது.
இதேவேளை, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை ஒப்படைக்கச் சம்மதித்துள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ள லீவிட், இது ஜனாதிபதி ட்ரம்பின் மிக முக்கியமான நிபந்தனை (Red Line) என்றும், இதில் அவர் பின்வாங்கப்போவதில்லை என்றும் கூறினார்.
இதனை இராஜதந்திர ரீதியாகச் சாதிக்க அமெரிக்கா விரும்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்காவின் சார்பில் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் (JD Vance) தலைமையிலான குழு பங்கேற்கும் என வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கரோலின் லீவிட் அறிவித்துள்ளார்.




