Saturday , 1 November 2025
மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது - சாகர காரியவசம்!

மாகாணசபைத் தேர்தல் நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யானது – சாகர காரியவசம்!

Spread the love

ஆட்சிக்கு வந்து ஒருவருடத்துக்குள் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது. மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

மாகாணசபைத் தேர்தல் காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ளமைக்கு மக்கள் விடுதலை முன்னணியும், தமிழ்த் தேசிய கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டும்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அமோக வெற்றிப் பெற்றதைத் தொடர்ந்து மாகாணசபைத் தேர்தலை நடத்தினால் படுதோல்வியடைய நேரிடும் என்ற அச்சத்தால் தான் மாகாணசபைத் தேர்தல் சட்டம் திட்டமிட்ட வகையில் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டது.

இனப்பிரச்சினைக்குத் தீர்வாகவே மாகாணசபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.ஆனால் வடக்கு மற்றும் கிழக்கு மக்களின் அரசியல் உரிமைகளை பாதுகாப்பதற்கு அவர்களின் பிரதிநிதிகள் என்று குறிப்பிட்டுக்கொள்பவர்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. ஆட்சியாளர்களின் நோக்கத்துக்கு அமைவாகவே செயற்பட்டார்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கினார்.

ஆனால் அந்த வாக்குறுதி இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை.மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான எவ்வித நடவடிக்கைகளும் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் எடுக்கும் முரண்பாடற்ற தீர்மானங்களுக்கு நிபந்தனையற்ற வகையில் ஒத்துழைப்பு வழங்குவோம்.அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. ஒற்றையாட்சியின் அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எடுக்கும் தீர்மானங்களை ஏற்போம் என்றார்.

Check Also

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் - எஸ்.எம்.மரிக்கார்!

முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறங்க தயார் – எஸ்.எம்.மரிக்கார்!

Spread the loveஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து ஒரே சின்னத்தில் மாகாணசபைத் தேர்தலில் களமிறங்கத் தீர்மானித்தால், …