விஜயை விமர்சித்த அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்
விவசாயத்தைப் பற்றி தெரியாத புதிய கட்சியினர் நெல் கொள்முதல் நிலையத்தை பற்றி அறிக்கை மற்றும் பேட்டி கொடுக்கிறார்கள் என அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் விமர்சனம் செய்துள்ளார்.
தொடர்மழையால் நெல்மணிகள் வீணாகி முளைத்ததைப் போல திமுக ஆட்சிக்கு எதிரான தொடர் எதிர்ப்பு முளைத்து வளர்ந்து செழித்து ஆட்சியாளர்களை வீட்டிற்கு அனுப்பப் போவது உறுதி என தவெக தலைவர் விஜய் அறிக்கையின் மூலம் தெரிவித்து இருந்தார்.
விவசாயிகள் மீது உண்மையாகவே அக்கறை கொண்டிருக்கும் அரசு என்றால் அது அவர்களின் வாழ்வாதாரத்தைக் காத்து, பொருளாதார ரீதியில் அவர்கள் உயர்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசாக இருக்க வேண்டும்.
மாறாக, ஏழை விவசாயிகள் தங்களின் கடின உழைப்பின் வாயிலாக விளைவித்தவற்றை உரிய நேரத்தில் கொள்முதல் செய்யாமல் அவற்றை மழையில் நனையவிட்டு வீணாக்கி, ஏழை விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் ஒரு அரசை என்னவென்று சொல்வது? என்று கேள்வியும் எழுப்பியிருந்தார்.
இந்நிலையில் கடலூர் சுற்றுலா மாளிகைக்கு வருகை தந்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், நெல்மணிகளும் விவசாயிகளும் பாதிப்படையாத வகையில் தமிழக அரசும் தமிழக முதல்வரும் துரித நடவடிக்கை மேற்கொண்டனர்.
விவசாயத்தையும் விவசாயிகளையும் பற்றி தெரியாமல் தற்பொழுது புதிய கட்சி தலைவர்கள் அறிக்கை விட்டு வருவதாகவும் பச்சை துண்டுகளை கட்டிக்கொண்டு தாங்களும் விவசாயிகள் என கூறி வருகின்றனர்.
விவசாயிகளும் விவசாயமும் பேசு பொருள் ஆகிவிட்டது. விவசாயத்திற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியவர் தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலின்.
இப்பொழுது அறிக்கை விடும் தவெக தலைவர் விஜய் கொரோனா காலத்தில் எங்கிருந்தார் என கேள்வி எழுப்பிய அவர், திமுகவும் அதன் தொண்டர்களும் எப்பொழுதும் மக்களுடனே இருந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news