தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் கொட்டித்தீர்த்த கனமழை
தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில், இன்றும் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் மாவட்டங்களில் நேற்று பிற்பகலில் தொடங்கிய கனமழை இரவிலும் நீடித்தது. குறிப்பாக தாமிரபரணி ஆற்றின் நீர்பிடிப்புப் பகுதிகளான திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் மழை வெளுத்துவாங்கியது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்திலும் கனமழை கொட்டியது.
திருச்செந்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால், சிவன் கோயில் வளாகத்திற்குள் மழைநீர் தேங்கியது. இதேபோல, திருச்செந்தூர் முருகன் கோயில் வளாகத்தில் தேங்கிய தண்ணீர் கடலுக்கு வழிந்தோடியது. அதிகளவு தண்ணீர் சென்றதால் கோயிலை ஒட்டிய கடற்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தாமிரபரணி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் கரையோரப் பகுதிகளுக்குச் செல்லக் கூடாது எனவும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவுறுத்தியுள்ளார்.
இதனிடையே, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுற்றுவட்டார பகுதிகளிலும் கனமழை பெய்தது
தஞ்சாவூர், திருவையாறு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிராம்பட்டினம் என மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.திருவாரூர், திருத்துறைப்பூண்டி, நன்னிலம் உளிட்ட இடங்களில் நேற்றும் கனமழை நீடித்தது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நாகை மற்றும் கீழ்வேளூர், சிக்கல், புத்தூர், வேளாங்கண்ணி உட்பட மாவட்டம் முழுவதும் கனமழை கொட்டியது.
மயிலாடுதுறை, மணல்மேடு, குத்தாலம், தரங்கம்பாடி, பொறையார், திருக்கடையூர், திருவாவடுதுறை உள்ளிட்ட இடங்களில் பலத்த காற்றுடன் கனமழை வெளுத்துவாங்கியது.
சீர்காழி மற்றும் அதைஒட்டிய திருமுல்லைவாசல், கூழையார், பழையார், எடமணல் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை பெய்தது.
தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி, இலக்கியம்பட்டி, ஒட்டப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.
அரியலூர், செந்துறை, அங்கனூர் உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக மிதமான மழை பெய்தது.
பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், குன்னம், வேப்பூர் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் பலத்த காற்றுடன் கனமழை கொட்டியது.
கொடைக்கானலிலும் மிதமான நீடித்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனர்.
கரூர் மாவட்டம் வீரராக்கியம், புலியூர், மனவாசி, மாயனூர், கிருஷ்ணராயபுரம், பஞ்சப்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இரண்டாவது நாளாக கனமழை நீடித்தது.நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சுற்றுவட்டார பகுதிகளிலும் மிதமான மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி, தலைவாசல், தம்மம்பட்டி, பெத்தநாயக்கன் பாளையம் உள்ளிட்ட இடங்களில் கனமழை வெளுத்துவாங்கியது.கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய தடாகம், கணுவாய், சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.திருப்பூர் நகரில் திடீரென கொட்டிய மழையால் வெப்பம் தணிந்தது.
இதே போல, ராணிப்பேட்டை, ஆற்காடு, வாலாஜாபேட்டை, கலவை, திமிரி, சோளிங்கர் உள்ளிட்ட இடங்களிலும் கனமழை கொட்டித்தீர்த்தது.இந்த சூழலில், தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் எனவும் கூறியுள்ளது.
இதன் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களிலும், ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்யும் என கணித்துள்ளது.
புதுக்கோட்டை, அரியலூர், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும்,தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என குறிப்பிட்டுள்ளது.
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணித்துள்ளது.




