தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது

தையிட்டி விகாரைக்கு எதிராக போராட்டம் – பலர் கைது
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. இந்நிலையில், மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் சிலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டதாக கூறப்படும் தனியார் காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதையும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் விசேட கௌரவத்திற்கு எதிர்ப்பையும் முன்வைத்து, ஞாயிற்றுக்கிழமை இன்றைய தினம் விகாரை முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றத்தின் மூலம் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேரின் பெயர்களைக் குறிப்பிட்டு, அவர்கள் போராட்டத்தில் கலந்து கொள்ளக் கூடாது என தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட போது, விகாரையை அண்மித்த பகுதிகளில் பொலிஸாரும் கலகம் அடக்கும் பொலிஸாரும் குவிக்கப்பட்டு இருந்ததுடன், போராட்டக்காரர்களுடன் ஏற்பட்ட வாக்குவாதம் மற்றும் முரண்பாடுகள் காரணமாக அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை உருவானது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இது முழுமையாக அமைதிவழியில் முன்னெடுக்கப்படும் போராட்டம் என்றும், எந்தவிதத்திலும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்தனர். மேலும், போராட்டக்காரர்கள் விகாரைக்குள் செல்லவில்லை என்றும், விகாரைக்கு எந்தவித சேதமும் ஏற்படுத்தப்படவில்லை என்றும் அவர்கள் வலியுறுத்தினர். விகாரைக்கு செல்லும் வீதியை பொலிஸார் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்துள்ளனர் எனவும், அவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள் மற்றும் வலி.வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கைகளைத் தொடர்ந்து போராட்டக் களத்தில் மேலும் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி தலைமையில் விசேட கலந்துரையாடல்




