புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்

புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம்
நாட்டில், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு பேரிடரையும் எதிர்கொள்ள அனர்த்த முகாமைத்துவ நிலையம் அனைத்து ஏற்பாடுகளையும் முன்னெடுத்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தென்கிழக்கே வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணி நேரத்துக்குள் தாழ்வு மண்டலமாக உருவாகக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது மேல் மற்றும் வடமேல் நோக்கி நகர்ந்து இலங்கையின், கிழக்கு கடற்கரையை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், இன்று முதல் நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை வீழ்ச்சி அதிகரிக்கக் கூடும் என்று வளிமண்டளவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
அத்துடன், ஊவா மாகாணத்திலும், மட்டக்களப்பு, அம்பாறை, பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில பகுதிகளில் 50 மில்லி மீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யும் என்றும் எதிர்வுக் கூறப்பட்டுள்ளது.
மலைநாட்டிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, கம்பஹா, கொழும்பு மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
இதனிடையே, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கையையும் விடுத்துள்ளது.
அத்துடன், பதுளை, மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கும் மண்சரிவுக்கான முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனத்தின் புவியியலாளர் வசந்த சேனாதீர தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் 9: விறுவிறுப்படையும் போட்டி! இந்த வாரம் வெளியேறியது யார்?




