தேசிய மக்கள் சக்தி அரசின் அடக்குமுறைகளுக்கு எதிராக எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடை நகரில் நடத்தப்படவுள்ள எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில் முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் கலந்துகொள்ளமாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இந்தப் பேரணியில் பங்கேற்கமாட்டார்கள்.
குறிப்பாக முன்னாள் ஜனாதிபதிகள் யாரும் இந்த எதிர்ப்புப் பேரணியில் கலந்துகொள்ளக் கூடாது என்ற கருத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்திருந்தார்.
இதன் பின்னரே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர்களின் முழுமையான ஒத்துழைப்புகள் கிடைக்கும் என்று பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்கட்சிகளின் கூட்டுப் பேரணியில் பங்கேற்பதில்லை என்று தீர்மானித்துள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையேயான அரசியல் முரண்பாடுகள் மீண்டும் வலுவடைந்து வருகின்றன.
ரணில் விக்கிரமசிங்க இந்த எதிர்ப்புக் கூட்டணியில் ஒரு தரப்பாக இல்லாவிட்டாலும், இந்தப் பேரணியின் பின்னணியில் உள்ள கட்சிகளில் பெரும்பாலானவை சஜித் பிரேமதாஸவின் நேரடி அரசியல் போட்டியாளரான ரணில் விக்கிரமசிங்கவுடன் முன்பு கூட்டணி வைத்திருந்த கட்சிகளாக உள்ளன.
இதனால், சஜித்தின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி, கூட்டணியின் நோக்கங்கள் மற்றும் தலைமைத்துவம் குறித்த சந்தேகம் காரணமாக, இந்தக் கூட்டுப் பேரணியில் இருந்து விலகி தனி வழியில் செயற்படத் தீர்மானித்துள்ளது.
அரசை எதிர்க்கும் அதேவேளை, முன்னாள் ஜனாதிபதிகள் விவகாரம் மற்றும் பிரதான எதிர்க்கட்சியின் விலகல் போன்றவை இந்த நுகேகொடை பேரணியின் ஒருங்கிணைப்பில் உள்ள நெருக்கடிகளைப் பிரதிபலிக்கின்றது.
மறுபுறம் சஜித் பிரேமதாஸ மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் மீளிணைவு தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news