“பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இன ரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது.”
– இவ்வாறு தேசிய மக்கள் சக்தி அரசைக் காட்டமாக விமர்சித்திருக்கின்றார் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன்.
இன்று காலை யாழ்ப்பாணம், சேர் பொன் இராமநாதன் வீதியில் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைமைச் செயலகத்தைத் திறந்து வைத்து அங்கு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-
“இன்று எமது கட்சியின் வளர்ச்சிப் பாதையில் ஒரு முக்கியமான மைல்கல் நாட்டப்பட்டுள்ளது.
கட்சி அலுவலகம் என்பது கட்சிக்கு ஒரு நங்கூரத்தை வழங்குகின்றது. உறுப்பினர் சேரவும், கலந்துரையாடவும், நிர்வாகச் செயற்பாடுகளைச் செவ்வனே செய்யவும் கட்சிச் செயலகம் உதவுகின்றது. எமது செயலகம் இப்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
அடுத்து நாம் வரவிருக்கும் தேர்தல்களைப் பற்றியும் நாம் கட்சி சார்பில் செய்யும் மக்கள் நலம் சார்ந்த செயற்றிட்டங்கள் மற்றும் உபயோகமான கைங்கரியங்கள் பற்றியும் சிந்திக்க வேண்டியுள்ளது.
கிழக்கில் எமது கட்சி ஒருங்கிணைப்பாளர் சோமசுந்தரம் அவர்களின் மறைவை அடுத்து நமது செயற்பாடுகள் ஸ்தம்பித்து உள்ளன. அவற்றை நாம் விரிவுபடுத்த வேண்டும்.
ஆனால் எமது கட்சி நேரடியாக ஈடுபடாவிட்டாலும், அதன் நலன்விரும்பிகள் மற்றும் உறுப்பினர்கள் வடக்கு மற்றும் கிழக்கில் பல்வேறு அமைப்புக்கள் மற்றும் நிறுவனங்கள் ஊடாக பிரபலம் தேடாமல் பல்வேறு சமூக, பொருளாதார செயற்பாடுகளை மேற்கொண்டுவருவதை நான் அறிவேன்.
ஏற்கனவே நமது கட்சி ஒரு முக்கியமான அரசியல் ரீதியான ஆங்கில நூலை வெளியிட்டுள்ளது. பல வெளிநாட்டு இராஜதந்திரிகள் அது பற்றி நல்ல கருத்துக்களை, அபிப்பிராயங்களை வெளியிட்டுள்ளனர். எமது அரசியல் பிரச்சினைகள் பற்றி உள்நாட்டில் மட்டும் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. எமது பிரச்சினைகளை உலகறியச் செய்வது எமது கடமையாகும். அதன் பொருட்டே எமது கட்சி குறித்த ஆங்கில நூலை வெளியிட்டது.
எமது காணிகள் அரசாங்கத்தாலும் பௌத்த பிக்குகளாலும், இராணுவத்தாலும் கையகப்படுத்துவது பற்றி சில வருடங்களுக்கு முன் ஒரு சர்வதேச கருத்தரங்கத்தை நாம் ‘சூம்’ வழியாக நடத்தினோம். அப்போது சம்பந்தன் அவர்களும் அதில் பங்கு பற்றி தமது கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். இஸ்ரேலியப் பேராசிரியர் ஒருவர், வேறு பேராசிரியர்கள் மற்றும் பல சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் அதில் பங்கு பற்றினார்கள். தமிழர் பிரதேசங்களில் நடைபெறும் காணி அபகரிப்பு பற்றிப் பேசி சர்வதேச சட்டம் மற்றும் சம்பிரதாயங்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்திருப்பதைப் பற்றிக் கூறிக் கண்டித்தார்கள்.
இஸ்ரேலியப் பேராசிரியர் அப்போதைய இலங்கை அரசாங்கத்தை இஸ்ரேலைப் போன்று ஓர் இன ரீதியான அரசாங்கம் என்று கூறினார். Ethnocratic state என்று ஆங்கிலத்தில் வர்ணித்தார்.
அதேபோல, காணி அபகரிப்பு தொடர்பில், பல சர்வதேச ஆய்வு நிலையங்கள் ஆவண படங்களை தயாரிப்பதற்கும், ஆய்வு அறிக்கைகளை ஆதாரபூர்வமாக வெளியிடுவதற்கும் நாம் கடந்த காலங்களில் உறுதுணையாக நின்று செயற்பட்டுள்ளோம்.
இவற்றை மக்கள் அறியமாட்டார்கள். ஏனென்றால், நாம், இவற்றைப் பிரசித்தி தேடாமல் செய்யவேண்டியிருந்தது. அரசியல் மாற்றங்களின் பின்னர் இவற்றை வெளியிடக் கூடியதாக இருக்கின்றது.
எனினும், இன்றைய அரசாங்கம் காணி அபகரிப்பு தொடர்பில் முன்னைய ஆட்சியாளர்களின் அதே மனோநிலையில் இருப்பதாகவே தென்படுகின்றது.
வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரம் ஏக்கர் அரச காணிகள் இன்னமும் படையினரால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. மிகக் குறைந்த தனியார் காணிகளே இன்றைய அரசாங்கத்தால் அவற்றின் சொந்தக்காரர்களுக்குக் கொடுக்கப்பட்டுள்ளன. அரச திணைக்களங்கள் வடமாகாண காணிகளைக் கையேற்க ஆயத்தமாகிக் கொண்டிருக்கின்றன.
எனினும் ஒரு சில பொது விடயங்களில் இந்த அரசாங்கம் நடந்து கொள்வது சரியானதாகவே படுகின்றது. நாட்டைச் சூறையாடியவர்களைச் சட்டத்தின் முன் கொண்டு வர அயராது பாடுபடுகின்றார்கள்.
தாம் கையேற்ற பொருளாதார வங்குரோத்து நிலையை மேலும் சீரழிந்து போகவிடாமல் காப்பாற்ற பல வழிகளில் பாடுபடுகின்றார்கள்.
வன்முறையில் ஈடுபடும் பாதாளக் குழுக்களை வேட்டையாடிக் கொண்டிருக்கின்றார்கள். போதை மருந்து வருகையையும் பாவனையையும் குறைக்கப் பாடுபடுகின்றார்கள்.
நான் எவ்வாறு முதலமைச்சராக இருந்த போது எனது அமைச்சர்கள் பற்றி ஊழல் முறைப்பாடுகள் வந்த போது அவற்றை மூடி மறைக்காமல் வெளிப்படுத்தி நீதி முறையான விசாரணைகளை ஆரம்பித்தேனோ அதேபோன்று ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான பலர் சம்பந்தமாக அரசாங்கம் நீதிமுறை நடவடிக்கைகளில் இறங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.
அவர்கள் மேற்கொள்ளும் நல்ல நடவடிக்கைகளை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். அதேவேளை, எமக்கு எதிரான அவர்களின் செயற்பாடுகளையும் நாம் அச்சம் இல்லாமல் சுட்டிக்காட்டத்தான் வேண்டும்.
குறிப்பாக, பூர்வீக குடிகளான எமக்கு நாம் இழந்த எமது தன்னாட்சி அதிகாரங்களை மீள வழங்குவதில் ஏனைய எல்லா கட்சிகளையும் விட மிகவும் இனரீதியான சிந்தனையுடனும் அறிவுபூர்வமற்ற விதத்திலும் இந்த அரசாங்கம் செயற்படுகின்றது. இந்த நாட்டைப் பொருளாதார ரீதியாக வலுவான ஓர் அமைதி நிறைந்த நாடாகக் கட்டி எழுப்பப் போவதாகக் கூறுகின்றார்கள்.
ஆனால், இந்த நாட்டின் பூர்வீக மக்களான தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளை மதியாமலும் தொடர்ந்து நசுக்கி வைத்திருப்பதன் ஊடாகவும் நிலையான சமாதானத்தையோ அல்லது வலுவான பொருளாதாரதையோ கட்டி எழுப்ப முடியாது என்பதே யதார்த்தமாகும். இதனை நான் கூறவில்லை. முரண்பாடுகளுக்கான தீர்வு தொடர்பிலான வல்லுநர்கள் இதனையே கூறுகின்றார்கள்.
ஆகவே, தமிழ் மக்களுக்கு இந்த அரசாங்கம் தனது மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பயனபடுத்தி, சமஷ்டி ரீதியான தக்க அதிகாரங்களை வழங்க வேண்டும்.
தமிழ் பேசும் வடக்கு, கிழக்கு மக்களுக்கு சமஷ்டி ரீதியான அதிகாரங்களை வழங்குவதே இலங்கையை ஆசியாவின் ஒரு நிலையான சமாதானமும், பொருளாதார வலுவும் மிக்க செழிப்பான நாடக ஆக்குவதற்கான ஒரே ஒரு இலகுவான அதேநேரம் விரைவானதுமான வழி ஆகும்.
சமஷ்டி என்று கூறாமல் கூட வடகிழக்கிற்கு சட்டப்படியான சுயநிர்ணய உரிமையைக் கையளிக்க முடியும். இதனைச் செய்தால், அரசாங்கம் எந்த ஒரு நாட்டிடமோ அல்லது சர்வதேச நாணய நிதியமிடமோ கை ஏந்த வேண்டியதில்லை.
ஆனால், என்.பி.பி. அரசாங்கம் இவ்வாறு செய்யும் அளவுக்கு யதார்த்தவாதிகளையோ, துணிச்சல்காரர்களையோ அல்லது இனவாதம் அற்றவர்களையோ தற்போது கொண்டிருக்கவில்லை என்பது எனது கருத்து.
குறைந்த பட்சம் அரசமைப்பில் இருக்கும் அரைகுறையான அதிகாரங்களைப் பெற்ற மாகாண சபைத் தேர்தல்களைக்கூட நடத்தி நாம் எந்த அதிகாரங்களையும் அனுபவிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற சிந்தனையில்த் தான் அரசாங்கத்தினர் இருக்கின்றார்கள்.
இந்த இடத்தில், இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியா தொடர்ந்தும் கரிசனை காட்டாது இருப்பதை நான் சுட்டிக்காட்ட வேண்டியிருக்கின்றது.
இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழான 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கும் மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கும் இந்தியா ஏன் இலங்கை அரசாங்கத்தை நிர்ப்பந்திப்பதற்குத் தொடர்ந்து தயங்குகின்றது என்று தெரியவில்லை.
இது இந்தியாவின் இயலாமையா அல்லது எம. மீதான அக்கறை இன்மையா என்று எனக்கு இன்றுவரை புரியவில்லை.
இதனால்தான் இங்குள்ள எமது மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் இந்தியா மீது ஒருவித அவநம்பிக்கையை இன்று கொண்டிருக்கின்றார்கள் என்ற உண்மையை நான் இத்தருணத்தில் சொல்லவேண்டியுள்ளது.
தற்போது மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் இருக்கும் இன்றைய அரசாங்கத்தை நிர்ப்பந்தித்து ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்த சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதற்கு இன்று அவர்களுக்கு இருக்கும் அருமையான சந்தர்ப்பத்தை இந்தியா தவற விடக்கூடாது. இந்தியா இந்த தார்மீக கடமையை செய்துதான் ஆக வேண்டும்.
இந்தியா மீது எனக்கு இன்னமும் இருக்கும் அளவற்ற நம்பிக்கை மற்றும் தொப்பிள் கொடி உறவுக்காரன் என்ற அடிப்படையிலேயே எனது இந்தக் கருத்துக்களை நான் உரிமையுடன் முன்வைக்கின்றேன்.
அதேவேளை, நாம் எமக்கு அதிகாரங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் சிங்கள மக்கள் மத்தியிலும், எமது நியாயம் மற்றும் வரலாறு போன்றவற்றை கொண்டுசெல்லும் அரசியலையும் முன்னெடுக்க வேண்டும். இது அவசியம். இதனை நான் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது முடிந்தளவுக்கு செய்திருக்கின்றேன்.
அண்மையில் நான் பல விடயங்களை சிங்கள வலைத்தளமொன்றிற்கு சிங்களத்தில் கூறி வைத்தேன். நான் சென்ற கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அங்கு வேலை செய்யும் பணியாளர் ஒருவர் என் பெயரைக் கண்டுவிட்டு ”அண்மையில் சிங்களத்தில் செவ்வியொன்றை வழங்கியவர் நீங்கள் தானா?” என்று கேட்டார். ”ஆம்” என்றேன். அப்பொழுது அவர் ”சேர் எங்களுக்கு எங்களைப் பற்றிய போதுமான சரித்திர அறிவு இல்லை என்று துணிந்து கூறியுள்ளீர்களே. அப்படிக் கூறக் காரணம் என்ன?” என்று கேட்டார்.
தமிழ்ப் பேராசிரியர்கள் இலங்கையின் சரித்திரம் பற்றிப் பேசுவதும் சிங்கள பேராசிரியர்கள் பேசுவதும் வெகுவாக வித்தியாசப்படுகின்றன. இதற்குக் காரணம் மகாவம்சம். அந்நூல் ஒரு சரித்திர நூல் அல்ல. அதற்கு ஒரு சரித்திர நூல் அந்தஸ்தை சிங்களப் பேராசிரியர்கள் சிலர் கொடுக்கப் போய்த்தான் எம் நாட்டுச் சரித்திரம் திரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று கூறினேன்.
சர்வதேச சரித்திர பேராசிரியர்கள், இந்திய பேராசிரியர் ஒருவர் மற்றும் நாட்டின் சிங்கள, தமிழ், இஸ்லாமிய பேராசிரியர்களும் சேர்ந்து இலங்கை பற்றிய ஒரு புதிய சரித்திர நூலை எழுத ஐக்கிய நாடுகள் அமைப்பின் யுனிசெவ் போன்ற ஏதாவது ஒரு அலகு உதவி செய்ய வேண்டும் என்பதை நான் வலியுறுத்தியுள்ளேன், என்றேன்.
சிங்கள தமிழர் மத்தியில் போதிய கருத்தொருமைப்பாடு ஏற்படாததற்குக் காரணம் சரித்திர ரீதியாக எமது வரலாறு சம்பந்தமான புரிந்துணர்வு வேறு வேறு ஆதாரங்களில் இருந்து இரு தரப்பாலும் தருவிக்கப்பட்டதாலேயாகும். சரித்திர அறிவின் ரீதியாகத் தக்க புரிந்துணர்வு சிங்கள இளைஞர், யுவதிகளிடைய ஏற்பட்டால் நாளைய அரசியல் நிலை மாறக்கூடும்.
நல்லூர் பிரதேச சபை எம் கைவசம் இருப்பதால் நாம் மக்களுக்குப் போதிய சேவைகள் செய்து எம்மைப் பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவது எமது உறுப்பினர்களின் கடமையாகும். ‘மான் கட்சி’ வெட்டிப் பேச்சுக்களில் ஈடுபடாமல் சேவை மனப்பான்மையுடன் கடமையாற்றுகின்றது என்று மக்கள் எமது கட்சியை அடையாளப்படுத்தும் அளவுக்கு நாம் உழைக்க வேண்டும்.
இப்பொழுதிருந்தே ஒவ்வொரு மாவட்டத்திலும் எமது உறுப்பினர்களாகத் தகைமை கொண்டவர்களைச் சேர்க்க நாம் பாடுபட வேண்டும்.
நாம் பழைய கட்சிகள் சிலவற்றுடன் கூட்டு சேர்ந்தால்தான் எமக்கு விமோசனம் கிடைக்கும் என்று சிலர் எம்முள் நினைக்கின்றார்கள். ஏழு வருடங்களே பூர்த்தி செய்திருக்கும் எமது இளம் கட்சியின் அங்கத்தவர்கள் சிலர் அவ்வாறு நினைப்பதில் பிழையொன்றுமில்லை. ஆனால் எமது சேவையையும் எமது நேர்மையையும் எமது மக்கள் சார்ந்த சிந்தனைகளையும் எமது தனித்துவத்தையும் நாம் மக்களுக்கு அடையாளப்படுத்த முடியுமென்றால் அண்மையில் உருவாகிய தேசிய மக்கள் கட்சி யாழ்ப்பாணத்தில் எவ்வாறு மூன்று ஆசனங்களை நாடாளுமன்றத் தேர்தலில் வென்றதோ, அதேபோன்று மாகாண சபை தேர்தலிலும் நாம் தனித்தே கூடிய ஆசனங்களைப் பெற முடியும் என்று கருதுகின்றேன்.
நாம் முதலில் எமது கட்சியை பலப்படுத்துவோம். எமது சிறப்பியல்புகளை மக்கள் அறியச் செய்வோம். அதன் பின்னர் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு நாம் மாகாண சபைத் தேர்தலில் யார் யார் உடன் கூட்டுச் சேர வேண்டும் என்று சிந்திப்போம். தற்போது யார் யாருடன் கூட்டுச் சேர்த்துள்ளோமோ அந்த உறவு தொடரட்டும். கூட்டுக்களிலும் பார்க்க எமது மக்களே எமக்கு முக்கியமானவர்கள்.
கட்சிகள் சில எந்த உண்மையும் இன்றி அவதூறுகளை உங்கள் மீது அலை அலையாக வீசுவார்கள். அவற்றைக் கண்டு தளராதீர்கள். தொடர்ந்து செயற்படுங்கள். உதாரணமாக, எனது மாகாணசபை காலத்தில் மத்தியில் இருந்து வட மாகாணசபைக்குக் கிடைத்த நிதியை மத்திக்குத் திருப்பி அனுப்பியதாக இன்றும் எம்மைப் பற்றி வேண்டுமென்றே குறை கூறப்படுகிறது. எனது ஐந்து வருட முதலமைச்சர் காலத்தில் ஒரு சதத்தை ஏனும் நாங்கள் வடமாகாணசபையில் இருந்து திருப்ப அனுப்பவில்லை என்பதே உண்மை.
ஆனால் மத்தியின் அதிகாரத்திற்குட்பட்ட அப்போதைய அரசாங்க அதிபர் கிடைத்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பிக் கையளித்தார் என்பதே உண்மையாகும். ஆனால், இந்த உண்மை தெரிந்தும் என்மீது தொடர்ந்து அவதூறு பரப்புகின்றார்கள். ஆனால், நான் இன்றும் இந்த தள்ளாத வயதிலும் இந்த செயற்பாடுகளுக்கு அஞ்சாமல் என்னால் முடிந்தளவுக்கு அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றேன். நான் இறக்கும்வரை இதை செய்வேன்.
இளைஞர் யுவதிகளே! எமது கட்சி உங்களால் மிகச் சிறப்பாக நிர்வகிக்கப்படும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. எமது கட்சியின் யாப்பில் இதற்கேற்றவாறு அமைய சில திருத்தங்கள் கூடிய விரைவில் ஏற்படுத்தப்படும். நான் நோயுற்றிருந்ததால் என்னால் இதனை இதுவரையில் கவனிக்க முடியவில்லை.
இன்று நீங்கள் யாழ்ப்பாணத்தில் திறப்பது போன்று எல்லா மாவட்டங்களிலும் கட்சி அலுவலகம் திறக்க வேண்டும். அப்போதுதான் மக்களுடன் நாம் உறவை வலுப்படுத்த முடியும். நீங்கள் அதனை செய்வீர்கள் என்று நம்புகின்றேன்.
எல்லாவற்றுக்கும் நிதி அவசியம். நாம் எல்லாவற்றுக்கும் புலம்பெயர் மக்களை எதிர்பார்க்க முடியாது. ஆகவே, எவ்வாறு நாம் எமது நாட்டிலேயே எமக்குரிய நிதியை பெற்றுக்கொள்ளலாம் என்ற உபாயங்களை வகுக்க வேண்டும். அப்போதுதான், நாம் எமது அரசியலை நிலையானதாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.” – என்றார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news