தமிழீழத்தை உருவாக்க ஐ.நா. முயற்சி! – குமுறுகிறார் டி.கே.பி.
“இலங்கையில் மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படாமல் இருப்பதற்கு அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐக்கிய நாடுகள் சபையின் நோக்கமாகும்.
அந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடரின் போதும் இராணுவம் உள்ளிட்ட முப்படையினர் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.
இந்த அரசும் ஐ.நா.வின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே பாடுபடுகின்றது.”
– இவ்வாறு ஓய்வுபெற்ற கடற்படை அதிகாரி ரியர் அட்மிரல் டி.கே.பி.தசநாயக்க தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“இம்முறை இடம்பெற்ற ஐ.நா. கூட்டத் தொடரில் அதிக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்று மனித உரிமைகள் ஆணையாளர் தெரிவித்திருந்தார்.
எவ்வாறிருப்பினும் அவரது உரையை வெளிவிவகார அமைச்சர் முற்றாக நிராகரித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது.
ஆனால், அதன் பின்னரான அரசின் நிலைப்பாடுகளை அவதானிக்கும் போது இது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் ஏதேனும் தொடர்புகள் காணப்படுகின்றதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்துவதைப் போன்று ரோம் பிரகடனம் கைச்சாத்திடப்பட்டால் அது ஒட்டுமொத்த பாதுகாப்பு படைகளையும் காட்டிக் கொடுப்பதற்குச் சமமாகும்.
பிரிவினைவாதிகளின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு இன்னும் இரு மைல் கற்களை மாத்திரமே கடக்க வேண்டியுள்ளது.
அதற்கான இரு ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டால் 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தக் கூடிய எல்லை வரை செல்ல முடியும்.
அவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் நாட்டின் தேசிய பாதுகாப்பு பலவீனமடையும். வெளியகப் பொறிமுறைகளை ஏற்கப் போவதில்லை என இந்த அரசு கூறினாலும், சர்வதேச அழுத்தங்களை எம்மால் தவிர்க்க முடியாது.
உண்மை மற்றும் நல்லிண ஆணைக்குழு அமைக்கப்பட்டாலும் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. எனவே, மீண்டும் இனப்பிரச்சினை ஏற்படுவதைத் தடுப்பதற்கு 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி தமிழீழத்தை உருவாக்குவதே ஐ.நா.வின் நோக்கமாகும்.
இந்த நோக்கம் நிறைவேற்றப்படும் வரை ஒவ்வொரு ஐ.நா. கூட்டத் தொடர் இடம்பெறும் போதும் தொடர்ச்சியாக எமக்கு இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நேரிடும்.
விடுதலைப்புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேசத்துடனான அவர்களது தொடர்புகள் இன்னும் காணப்படுகின்றன.
அவர்களிடம் பலமும், பணமும் இருக்கின்றது. எனவே அவர்கள் இதனைத் தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வார்கள்.
இது ஓயாத அலையாகும். எனவே, ஐ.நா.வைப் போன்று நாமும் இடைவிடாது இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும். அவ்வாறில்லையெனில் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாது.
போரால் தோற்கடிக்கப்பட்ட ஒரு விடயத்தை மீண்டும் ஒப்பந்தம் மூலம் வெற்றி கொள்ள முயற்சிக்கின்றனர்.
இதற்கு எதிராகப் பாதுகாப்புப் படையினர் குரல் கொடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும். பாதுகாப்புப் படை மாத்திரமின்றி முழு நாடும் இதற்காக ஒன்றிணைய வேண்டும்.
புலம்பெயர் தமிழர்களிடம் நாம் உங்களுக்காக நிற்கின்றோம் என்பதைக் காண்பிப்பதற்காகவே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு விஜயம் செய்தார்.
எதிர்கால நிதித் திரட்டலே ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் நோக்கமாகும்.
ஏதோ ஒரு நோக்கத்துக்காக இந்த அரசு ஐ.நா.வின் தேவைகளை நிறைவேற்றுவதற்காக உறுதி பூண்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சரும் அதற்கேற்பவே நாடாளுமன்றத்திலும் சில கூற்றுக்களை முன்வைத்துள்ளார்.
இதற்கு நாட்டு மக்கள் எதிர்ப்பை வெளியிட வேண்டும்.” – என்றார்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news