அரச மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு சேவை விரிவாக்கம்

அரச மருத்துவமனையில் சிறுநீரக சுத்திகரிப்பு சேவை விரிவாக்கம்
இலங்கையில் அதிகரித்து வரும் சிறுநீரக நோயாளிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, அரச மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் இரத்தச் சுத்திகரிப்பு (Hemodialysis) சேவைகளை அரச-தனியார் பங்களிப்பு முறையின் கீழ் விரிவுபடுத்த அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
தற்போது நாடு முழுவதும் சுமார் 80 அரச மருத்துவமனைகளில் இந்தச் சேவைகள் வழங்கப்படுகின்றன. இருப்பினும், நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தற்போதுள்ள இயந்திரங்கள் மற்றும் வசதிகள் போதுமானதாக இல்லை என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இதனால் நோயாளிகள் உரிய நேரத்தில் சிகிச்சை பெறுவதில் பாரிய சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
கண்டி தேசிய மருத்துவமனையில் ஏற்கனவே வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அரச-தனியார் பங்களிப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் ஏனைய வைத்தியசாலைகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது.
இரத்தச் சுத்திகரிப்பு இயந்திரங்கள், நீர் சுத்திகரிப்பு அமைப்புகள் (Reverse Osmosis), அதற்குத் தேவையான நுகர்பொருட்கள் மற்றும் இயந்திரங்களின் பராமரிப்பு ஆகியவற்றை தனியார் நிறுவனம் முழுமையாக மேற்கொள்ளும்.
அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அரசாங்கம் வழங்கும். சிகிச்சைகள் அனைத்தும் அரச சுகாதார ஊழியர்களால் வழங்கப்படும் என்பதோடு, முழுமையான மருத்துவக் கண்காணிப்பு சுகாதார அமைச்சின் கீழேயே இருக்கும்.
தற்போது கொழும்பு தேசிய மருத்துவமனையில் ஒரு நோயாளிக்கு ஒருமுறை இரத்தச் சுத்திகரிப்பு செய்ய 12,221 ரூபா செலவாகிறது. கண்டி மருத்துவமனையில் இது 10,713 ரூபாவாகும். இதில் தனியார் நிறுவனத்திற்கு பராமரிப்பு மற்றும் இயந்திரங்களுக்காக 6,700 ரூபா செலுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
“இந்த நடவடிக்கையானது அரச மருத்துவமனைகளில் சேவையை முடக்கி, தனியார் துறையை ஊக்குவிக்கும் முயற்சி அல்ல. மாறாக, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களுக்குத் தடையற்ற, வினைத்திறனான சேவையை வழங்குவதே இதன் நோக்கம்” என அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ விளக்கமளித்தார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை முழுமையான அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
“போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு இனி கடும் நெருக்கடி” : ஜனாதிபதி




