கம்ருதின் மட்டும் என் கையில கிடைச்சான் – ஆத்திரத்தை கொட்டிய பிரஜின்

கம்ருதின் மட்டும் என் கையில கிடைச்சான் – ஆத்திரத்தை கொட்டிய பிரஜின்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் 9 போட்டியாளர்கள் பங்கேற்ற கார் டாஸ்கில், சான்ட்ராவை பார்வதி மற்றும் கம்ருதின் இணைந்து காரிலிருந்து தள்ளிவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. அதே நேரத்தில் உடல்நலக் குறைவு காரணமாக சான்ட்ரா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதும் பரபரப்பை அதிகரித்தது.
இந்த நிலையில், சான்ட்ராவின் கணவரும் முன்னாள் பிக்பாஸ் போட்டியாளருமான பிரஜின் செய்தியாளர்களை சந்தித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனது வாழ்க்கையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கியதாக கூறிய பிரஜின், ஏற்கனவே மூன்று படங்களில் நடித்துவிட்டதாகவும், தற்போது புதிய திரைப்பட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் தெரிவித்தார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் கூறினார்.
பிரஜின் சொன்னதென்ன?
மேலும் பிக்பாஸில் இருந்து வெளியேறிய பிறகும் தன்னைப் பற்றிய பேச்சுகள் தொடர்வதாக கூறிய அவர், தான் ஏன் வெளியேற்றப்பட்டேன் என்பதற்கான காரணம் இன்னும் புரியவில்லை என்றும், நல்ல விஷயங்கள் செய்ததால்தான் தனது பெயர் இன்னும் பேசப்படுகிறது என நம்புவதாகவும் தெரிவித்தார். பிக்பாஸ் 9வது சீசன் குறித்து பேசும்போது, முந்தைய சீசன்களில் 50 நாட்களிலேயே வெற்றியாளரை கணிக்க முடியும் என்றும், ஆனால் இந்த சீசனில் யார் ஜெயிப்பார் என்பது இன்னும் புதிராகவே இருப்பதாகவும் பிரஜின் கூறினார்.
சான்ட்ரா எப்படி இருக்கிறார்?
‘டிக்கெட் டூ ஃபினாலி’ டாஸ்கில் அரோரா வெற்றி பெறுவார் என நினைக்கவில்லை என்றும், சான்ட்ரா வென்றிருக்க வேண்டும் என எண்ணியதாகவும் அவர் தெரிவித்தார். சான்ட்ராவுக்கு நடந்த சம்பவம் குறித்து மன வேதனை தெரிவித்த பிரஜின், “என்னுடைய மனைவியை காரிலிருந்து தள்ளியதைப் பார்த்ததும் கஷ்டமாக இருந்தது. இந்த தகவல் வெளியில் இருந்து தான் எனக்கு கிடைத்தது. பிக்பாஸ் ஒப்பந்தத்தில் இருந்ததால் உடனே பேச முடியவில்லை. நிகழ்ச்சி குழுவை தொடர்பு கொண்டு கேட்டபோது, சான்ட்ரா தற்போது நலமாக இருப்பதாக கூறினர்” என்றார்.
கம்ருதினுக்கு காத்திருக்கும் ஆப்பு
மேலும், “அங்கு நடந்த சம்பவங்கள் நடந்திருக்கக் கூடாது. என்ன பேச வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பது போட்டியாளர்களுக்கு சுய அறிவாக இருக்க வேண்டும். கம்ருதின் மற்றும் பார்வதி தவறு செய்திருந்தால், அவர்களுக்கு உரிய தண்டனை இந்த வாரமே வழங்கப்பட வேண்டும். மீண்டும் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்ல இருக்கிறேன். அப்போது கம்ருதின் உள்ளே இருந்தால் அது அவருக்கு கெட்ட நேரம், இல்லையெனில் நல்ல நேரம். இது ஒரு எச்சரிக்கையாக கூட இருக்கலாம்” என கூறியுள்ளார்.
இந்த விவகாரம் பிக்பாஸ் ரசிகர்களிடையே மேலும் சூடுபிடித்துள்ள நிலையில், நிகழ்ச்சி குழு எடுக்கப்போகும் நடவடிக்கைகள் என்ன என்பது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறாரா கம்ருதீன்?




