கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு

கல்வித் துறை மீள்கட்டுமானம்: பிரதமர்– யுனிசெப் சந்திப்பு
அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களுக்கும், யுனிசெப் (UNICEF) பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு அண்மையில் பிரதமர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின்போது, இயற்கை அனர்த்தம் ஏற்பட்டதிலிருந்து இதுவரை பாதிக்கப்பட்ட மாணவர் சமூகத்தைப் பாதுகாக்கவும், சேதமடைந்த பாடசாலைக் கட்டமைப்புகளை மீளக் கட்டியெழுப்பவும் அரசாங்கம் முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் மற்றும் அதன்போது எதிர்கொள்ளப்படும் சவால்கள் குறித்து பிரதமர் விளக்கினார்.
மண்சரிவு அபாயம் காணப்படும் பிரதேசங்களுக்கு அண்மையிலுள்ள பாடசாலைகளை அதே இடங்களில் மீண்டும் திறப்பது பாதுகாப்பற்றதாக இருக்கும் என்பதால், அத்தகைய பாடசாலைகளை அடையாளம் கண்டு, விஞ்ஞானபூர்வமான தரவுகளின் அடிப்படையில் அவற்றை அதிக பாதுகாப்பான இடங்களுக்கு இடமாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் தீவிரமாக கவனம் செலுத்தி வருவதாக பிரதமர் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதுடன், பெற்றோருக்கு மேலதிகச் சுமை ஏற்படாத வகையில் மாணவர்களை மீண்டும் பாடசாலைகளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வீட்டிற்கு அடுத்தபடியாகப் பிள்ளைகளுக்கு மிகவும் பாதுகாப்பான இடம் பாடசாலை என்பதாலும், அங்கு அவர்களின் உள ஆரோக்கியம் மேம்படும் என்ற நம்பிக்கையும் இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார்.
மேலும், பாதிக்கப்பட்ட பாடசாலைகளை இடமாற்றம் செய்தல், உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல், சில பாடசாலைகளை ஒன்றிணைத்து நிர்வகித்தல், டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்ப உத்திகள் மூலம் கற்றல்–கற்பித்தல் செயன்முறையை எளிதாக்குதல், விசேட போக்குவரத்து வசதிகளை வழங்குதல் போன்ற விடயங்களிலும் அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டினார். இவ்விடயங்களை ஆழமாக ஆய்வு செய்து நீண்டகாலத் தீர்வுகளை முன்வைப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்வித் துறையை மீளக் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும், அதற்காக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வேலைத்திட்டங்களையும் பாராட்டிய யுனிசெப் பிரதிநிதிகள், அரசாங்கத்திற்குத் தேவையான அதிகபட்ச ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தனர். எதிர்கால நடவடிக்கைகளை இரு தரப்பினரும் இணைந்து முன்னெடுப்பதன் அவசியம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தச் சந்திப்பில், இலங்கைக்கான யுனிசெப் பிரதிநிதி எம்மா பிரிகாம் (Emma Brigham), லட்சுமி சுரேஷ்குமார், நிஷாந்த சுபாஷ், யஷிங்க ஜயசிங்க ஆகியோருடன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ, கல்விப் பணிப்பாளர் தக்ஷிண கஸ்தூரியாராச்சி, பிரதிப் பணிப்பாளர் கசுன் குணரத்ன மற்றும் உதார திக்கும்புர ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை நீடிப்பு




