இன்று முதல் பலத்த மழைக்கு வாய்ப்பு!

நாடு முழுவதும் இன்று முதல் எதிர்வரும் டிசம்பர் 14ஆம் திகதி வரை பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு இலங்கையை மையமாகக் கொண்டு வளிமண்டலத் தளம்பல் நிலை உருவாகுதல் மற்றும் அதிக ஈரப்பதன் கொண்ட கீழைக்காற்றுகளின் வருகையே இதற்குக் காரணமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, டிசம்பர் 9 முதல் 12ஆம் திகதிகளில் நாடு முழுவதும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதன்படி மத்திய, ஊவா, மேல், சப்ரகமுவ மாகாணங்களில் பலத்த மழை பெய்யக்கூடும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
அத்துடன் தென், வடக்கு, கிழக்கு, வடமத்திய மாகாணங்களின் பல பகுதிகளில் ஓரளவு மழை பெய்யக்கூடும்.
இதேவேளை மலையக பகுதிகளில் தற்போது நிலவும் சூழல் காரணமாக, பொதுமக்கள் இன்னும் சில நாட்களுக்கு வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயத்திலிருந்து பாதுகாப்பான இடங்களில் தங்கியிருப்பதே சிறந்தது எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக புவியியற்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
மலையகத்தின் மண் அதிக ஈரத்தன்மையுடன் உள்ளதாகவும், வெப்பநிலை மிகக் குறைவாக இருப்பதால், நீர் ஆவியாதல் மிகக் குறைவாக உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் நாளை முதல் தென்மேற்கு இலங்கையில் உருவாகும் தளம்பல் நிலை, மலையகத்தில் மண்சரிவு அபாயத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் உள்ள நீர்ப்பாசன அதிகாரிகள், தற்போது குளங்களின் நீர்மட்டத்தை முழு வழங்கல் மட்டத்தில் பேணாமல், சற்று குறைந்த மட்டத்தில் பேணலாம் என்றும் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8 முதல் 14 வரை கனமழை கிடைக்கும் என்பதால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தாழ்நிலப் பகுதிகளிலும், குளங்கள் மற்றும் ஆறுகளுக்கு அருகிலும் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம் என வலியுறுத்தியுள்ளார்
லெபனானை ஆக்கிரமிக்கத் தயாராகி வரும் இஸ்ரேல்




