அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்

அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழை தொடரும்
டிட்வா புயல் வலுவிழந்த போதிலும் சென்னையில் கனமழை கொட்டித் தீர்த்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தத்தளிக்கும் வாகனங்கள்
சென்னை – கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கசாவடியில் குளம் போல் மழைநீர் தேங்கியுள்ளது. 14 செமீ மழை கொட்டிய நிலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் வாகனங்கள் தத்தளித்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
முதல்வர் ஸ்டாலின் முக்கிய உத்தரவு
‘டிட்வா’ புயல் காரணமாக ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புக்கான இழப்பீடுகளை விரைந்து வழங்கிட மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். வீடுகளின் சேதங்கள், மனித உயிரிழப்புகள், கால்நடை உயிரிழப்புகள் போன்றவற்றிற்கான இழப்பீடுகள் விரைந்து வழங்கிட வேண்டும் எனவும், பல்வேறு மாவட்டங்களில் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரவும் அறிவுறுத்தினார்.
சென்னைக்கு 50 கி.மீ தொலைவில் டிட்வா
வங்கக் கடலில் நிலவிய ‘டிட்வா’ புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவி வருகிறது. இது சென்னைக்கு கிழக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே இடத்தில், பல மணி நேரமாக மையம் கொண்டுள்ளது.
4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்
சென்னை அருகே இரண்டாவது நாளாக ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கும் நிலையில், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்து தாழ்வு மண்டலமாக வலுவிழக்க கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆவடியில் மக்கள் அவதி
தொடர் மழையால், ஆவடி அருகே கோவில்பதாகையில் கிரிஸ்ட் காலனியில் உள்ள 5,000 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. கோவில்பதாகை ஏரியின் உபரி நீர் காலனிக்குள் புகுந்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. மின்விநியோகமும் துண்டிக்கப்பட்டதால், குழந்தைகள், பெரியவர்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர்.
சென்னையில் விடிய விடிய மழை
சென்னையில் பகல் முழுவதும் கொட்டித் தீர்த்த கனமழை நள்ளிரவிலும் தொடர்ந்தது. டிட்வா புயல் வலுவிழந்த போதிலும், சென்னைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் பல மணி நேரமாக ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை மாநகர் மற்றும் புறநகரில் விடிய விடிய மழை கொட்டித் தீர்த்தது.




