யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!

யாழில் இளைஞர் ஒருவர் கொடூரமாக வெட்டிப் படுகொலை!
யாழ்ப்பாணத்தில் கொட்டும் மழைக்குள் இளைஞர் ஒருவர் வன்முறைக் கும்பலால் மிகக் கொடூரமான முறையில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி சந்திக்கு அண்மித்த பகுதியில் இன்று காலை வேளை இந்த வாள்வெட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கொக்குவில் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில், கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமைகளில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
அதன் பிரகாரம் இன்று ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்தில் கையெழுத்திட்ட பின்னர், தனது நண்பனுடன் மோட்டார் சைக்கிளில் ஆடியபாதம் வீதி ஊடாக தனது வீடு நோக்கிப் பயணித்த வேளை பொலிஸ் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில், திருநெல்வேலி சந்தியை அண்மித்த பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் அடங்கிய வன்முறைக் கும்பல் அவர்களின் மோட்டார் சைக்கிளை வழிமறித்து பின்னால் அமர்ந்து பயணித்த இளைஞர் மீது சரமாரியாக வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டனர்.
தாக்குதலாளிகளிடம் இருந்து உயிரைக் காக்க வாள் வெட்டுக் காயங்களுடன் வீதியில் சுமார் 50 மீற்றர் தூரம் ஓடிச் சென்றவரைத் தாக்குதலாளிகள் துரத்தித் துரத்தி வெட்டியுள்ளனர்.
ஓடிச் சென்றவர் வர்த்தக நிலையம் ஒன்றின் முன்பாக வீழ்ந்த போது, துரத்தி வந்த நால்வரும் சரமாரியாக வாள் வெட்டை மேற்கொண்டதில் இளைஞரின் கால் ஒன்று கணுக்காலுடன் துண்டாடப்பட்டுள்ளது. அதையடுத்து தாக்குதலாளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இரத்த வெள்ளத்தில் காணப்பட்ட இளைஞரை அங்கிருந்தவர்கள் மீட்டு, யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், வைத்தியசாலையில் இளைஞர் உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முன்பகை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளது என்று ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் கமராக்களில் சம்பவங்கள் பதிவாகியுள்ளதால் தாக்குதலாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும், அவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை:




