புனரமைப்பு பணிகள் இடைநடுவில் இருப்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு
புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் கீழ் உள்ள சித்தாறு, சிவசாமி மற்றும் வீரசிங்கம் ஆகிய மூன்று அணைக்கட்டுக்கள் 85 மில்லியன் ரூபாய் மதிப்பிலான உலக வங்கியின் நிதியுதவியுடன் புதிதாக அமைக்கப்பட்டு வருகின்றன. எனினும், இப்பணிகள் நீண்டநாட்களாக முடிவுறாத நிலையில் உள்ளதால், விவசாயிகள் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
சித்தாறு அணைக்கட்டு தற்போது ஆரம்பக்கட்டப் பணிகளில் உள்ளது. சிவசாமி அணைக்கட்டில் கதவு பொருத்தும் பணி இன்னும் தொடங்கப்படாத நிலையில் காணப்படுகிறது; வீரசிங்கம் அணைக்கட்டின் பணிகள் இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், மூன்று அணைக்கட்டுகளும் முழுமையாகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில் விவசாயிகள் விரைவில் பணிகளை முடிக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகளின் கோரிக்கையையடுத்து, காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்ட பணிப்பாளர், உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட குழுவினர் இன்று (01.11.2025) அணைக்கட்டுகளுக்குச் சென்று அவற்றின் நிலைமைகள் தொடர்பில் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்தப் பணிகள் கடந்த ஏப்ரல் மாதம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்களில் நிறைவு செய்யப்படும் என ஒப்பந்தக்காரர்கள் தெரிவித்திருந்த போதிலும், கடந்த இரண்டு மாதங்களாக வேலையில் இடைநிறுத்தம் ஏற்பட்டுள்ளதுடன் ஒவ்வொரு காரணங்களை கூறி வருவதாக விவசாயிகள் குற்றம் சுமத்தினர்..
இன்றைய சந்திப்பின் போது ஒப்பந்தக்காரர்கள் எதிர்வரும் நவம்பர் 4ஆம் திகதி முதல் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதாக உறுதியளித்தனர். மேலும், நவம்பர் 15ஆம் திகதிக்குள் பணிகளை ஆரம்பிக்க தவறின், அவர்களின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மாற்று வழியில் புனரமைப்பு மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
விவசாயிகள் அணைக்கட்டுகள் எங்களுக்கு மிகவும் அவசியம். இதனால், கடந்த சிறுபோகத்தில் சுமார் 300 ஏக்கர் நிலங்களைப் பயிரிடாமல் காத்திருந்தோம். முல்லைத்தீவில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் வயல் நிலங்களில் இதுவும் ஒன்றாகும். அடுத்த வருட சிறுபோகத்திலும் அதே நிலை காணப்படக்கூடும் என குற்றம் சாட்டினர்.
இந்தச் சந்திப்பில் காலநிலைக்கு சீரமைவான நீர்பாசன விவசாய திட்ட பணிப்பாளர் சமன் பந்துலசேன, உலக வங்கியின் இலங்கை பிரதிநிதி, கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் சுஜீவரூபன், புதுக்குடியிருப்பு கிழக்கு கமக்கார அமைப்பின் தலைவர், செயலாளர் மற்றும் பல விவசாயிகள் கலந்துகொண்டு வாத பிரதிவாதங்களுடன் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தனர்.
Tamilnewsstar | Tamil News Website | Sri Lanka News Online | Latest Tamil News | Indian and World News | Daily Tamil News, Sri Lankan News | Jaffna news Tamil News Website, Sri Lanka News Online,Latest Tamil News, Indian and World News, Daily Tamil News, Sri Lankan News, Jaffna news